திருச்சி: திருச்சியில் இருந்து இன்று (அக்.11) மாலை 5:40 மணிக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானம் IX613 சார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுமார் 4500 அடி உயரத்தில் பறந்துகொண்டிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திருச்சி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனாலும், விமானத்தை தரையிறக்க சக்கரங்களை வெளியேற்ற பயன்படுத்தும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் ஒன்றரை மணிநேரமாக தரையிறங்க முடியாமல் திருச்சி மற்றும் புதுகோட்டை மாவட்டங்களின் நார்த்தாமலை, அன்னவாசல், முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் மேல் நீண்ட நேரம் வட்டமடித்தது. இதற்கிடையே, விமானம் பாதுகாப்பாக தரையிறங்க புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் காமினி, "மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வானில் வட்டமடித்தது. எரிபொருள் தீர்ந்த பிறகு பாதுகாப்பாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இத்தகைய சூழ்நிலைக்கென பாதுகாப்பு நடைமுறைகள் (SOP) உள்ளன. அவற்றை பின்பற்றி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவோம். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் உத்தரவின் பேரில் மருத்துவ குழுவினர், தீயணைப்பு படையினர், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சுமார் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் தகுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகள், அவர்களது உறவினர்கள், விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ காலில் பேசிய காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் தப்பிப்பு: செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், "லேண்டிங் பிரச்சனை காரணமாக விமானம் வானத்திலேயே வட்டமிட்டு வந்தது. ஆனால், விமானியின் துரிதமான செயலால் 141 பயணிகள் உயிர் பாதுகாக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 99 சதவீதம் நல்லபடியாக விமானம் தரை இறங்கும் எனக் கூறியிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது லேண்டிங் பிரச்சனையால் தான். பெட்ரோலை காலி செய்வதற்காகவே விமானம் வானில் வட்டமடித்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் முதலமைச்சர் தொடர்பு கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் அடிப்படையிலேயே மாவட்ட நிர்வாகம், அனைத்து அலுவலர்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது. இதில், பயணிகள் பெருமளவில் பதற்றம் ஆகவில்லை. ஆனால் விமானி சமயோசிதமாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்காததால், எந்த ஒரு அச்சமும் பதற்றமும் இல்லாமல் பயணிகளை தரை இறக்கினார். அந்த விமானிக்கு என்னுடைய பாராட்டுகள்" என கூறினார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் அனுபவம்: அப்துல்லா என்பவர் பேசுகையில், "விமானம் புறப்பட்டு 2 மணி நேரமாக ஒரு இடத்தில் சுற்றி வந்தது. விமானம் ஏன் ஒரே இடத்தில் சுற்றி வருகிறது என எங்களுக்கு முதலில் புரியவில்லை. நீண்ட நேரமாக விமானம் சுற்றி வந்ததால் 4 வருடமாக தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்யும் எனக்கே ஒருவித பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் இன்னும் 10 நிமிடத்தில் தரையிறக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக இறங்கியுள்ளார்" என்றார்.
பயணி நாராயணசாமி கூறுகையில், "விமானம் புறப்பட்டு அரை மணி நேரம் ஆன பிறகு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர். மனஉளைச்சல் காரணமாக அடுத்து ஷார்ஜா புறப்படும் விமானத்தில் நான் செல்லவில்லை" என்றார்.
விமான நிலையத்திற்கு நேரில் வந்திருந்த திருச்சி அரசு மருத்துவக்க்லலூரி மருத்துவமனையின் டீன் குமரவேல் பேசுகையில், நான் விமான நிலையத்தில் அதிகாரிகளை சந்தித்துப் பேசினேன் அனைத்து பயணிகளும் நலமாக உள்ளனர். பெரும்பாலான பயணிகள் விமானத்திலிருந்து நடந்தே இறங்கி வந்தனர். 4 முதல் 5 பேருக்கு வீல் சேர் வசதி தேவைப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு மருத்துவக்கல்லூரியும் தயார் நிலையில் வைக்கப்ட்டது. 150 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் எங்களது உதவி இந்த நேரத்தில் தேவைப்படவில்லை" என கூறினார்.
ஏர் இந்தியா தரப்பு விளக்கம்: "இயக்கக் குழுவினரால் அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு முன், ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு எரிபொருளையும், எடையையும் குறைக்கவே விமானம் வானத்தில் பலமுறை வட்டமிட்டது. தடங்கலுக்கான காரணம் குறித்து முறையாக விசாரிக்கப்படும். மேலும், பயணிகளின் பயணத்திற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Air India Express Flight IX 613 from Tiruchirapalli to Sharjah has landed safely at Tiruchirapalli airport. DGCA was monitoring the situation. The landing gear was opening. The flight has landed normally. The airport was put on alert mode: MoCA https://t.co/5YrpllCk2m pic.twitter.com/Q8O5N6zRo6
— ANI (@ANI) October 11, 2024
முதலமைச்சர் வாழ்த்து: விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், "சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தேன். தற்போது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். விமானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
I am heartened to hear that the #AirIndiaExpress flight has landed safely. Upon receiving news of the landing gear issue, I immediately coordinated an emergency meeting with officials over the phone and instructed them to implement all necessary safety measures, including…
— M.K.Stalin (@mkstalin) October 11, 2024