கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எமக்கல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
இதனால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப் பட்டது. திமுக அரசு, உரிய மருத்துவர்களை நியமிக்காமல் குறைந்தளவு சிகிச்சைகள் மட்டுமே வழங்கி வருகிறது. மக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்.
மருத்துவர்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மருத்துவர்களை தாக்குவது ஏற்புடையதல்ல. டிஜிட்டல் பயிர் சர்வே பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது கண்டனத்துக்குரியது.
இதையும் படிங்க:"அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது" - தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
இது போன்ற பணிகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்ள வேண்டும், அல்லது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மேற்கொள்ளவேண்டும் வேளான் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் கால்வாய் திட்டம், உலக தரத்திற்கு இணையாக அமைக்கப் பட்ட மலர்கள் ஏற்றுமதி மையம், படே தள கால்வாய் திட்டம், போன்ற மகத்தான திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவந்த காரணத்தால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த ஒலா தொழிற்சாலை போன்றவற்றை திமுக அரசு கொண்டுவந்தது என்று முதல்வர் கூறுவது கண்டனத்துக்கு உரியது. இதனை திமுக மறைத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியிலிருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி என்பதால் அதிமுக என்றும் செல்வாக்கு உள்ள கட்சி.
எங்களைப் பொறுத்தவரை மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் அது பாஜகவுக்குப் பொருந்தாது" என தெரிவித்தார். இந்தநிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி முனுசாமி, அசோக் குமார், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.