வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து பள்ளிக்கொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "அதிமுகவால் அடையாளம் காணப்பட்டவர், இன்று நம்மை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் நம்மை துரோகி என்றும், நாம் முதுகில் குத்தியதாகவும் கூறுகிறார். அதிமுக யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. 2019ஆம் அண்டு தேர்தலில் அதிமுக அவருக்காக கடுமையாக உழைத்தது. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்" என ஏ.சி.சண்முகத்தை சாடி பேசினார்.
தொடர்ந்து பேசி அவர், "வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பவுடர் போட்டியா? பேரன் லவ்லி போட்டியா? என இழிவாக பேசுகிறார். இன்னொரு அமைச்சர் பெண்களின் இலவச பேருந்து பயணத்தை 'ஓசி பஸ்' என்று பேசுகிறார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் திமுகவிற்கு, பெண்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது 75 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால் வெளியில் ஒரு கோடி பேருக்கு மேல் கொடுத்துள்ளதாக பொய் சொல்லி வருகின்றனர். இது குறித்து மக்கள் இன்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்" என்று பேசினார்.
மக்கள் வெறுக்கும் திமுக ஆட்சி: மேலும், "மடிக்கணினி திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்திவிட்டது. அன்று மாணவர்கள் மடியில் மடிக்கணினி விளையாடியது. ஆனால் இன்று மாணவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கும் ஒரே அரசு திமுக தான்" என கடுமையாக சாடினார்.
கும்பகர்ண தூக்கம் போடும் திமுக: தொடர்ந்து பேசிய அவர், "ஆந்திரா அரசு ரூ.300 கோடி செலவில் பாலாற்றில் கட்டும் தடுப்பணையை திமுக அரசு தடுக்க வக்கில்லாமல் உள்ளது. பாலாற்றில் அணை கட்டிவிட்டால் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக மாறும். இனியாவது கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து திமுக எழுந்துக் கொள்ள வேண்டும்" என விமர்சித்து பேசினார்.
தேசிய கட்சி கூட்டணியில் விலக காரணம்: "தமிழகத்தில் புயல், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் நிதி கொடுப்பது இல்லை. ஆனால், வடமாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்கிறார்கள். மாற்றான் தாய் பிள்ளை மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். அதனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினோம்.
குறிப்பாக, மத்தியில் கூட்டணி வைத்தால் அவர்கள் கொண்டு வரும் திட்டத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே, தனித்து நின்று வென்று தமிழகத்தின் நலன்களை மீட்டெடுக்க உள்ளோம். நாங்கள் பயந்திருந்தால் கூட்டணியில் தான் இருந்திருப்போம். பயப்படாத காரணத்தினால் தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம்" எனக் கூறினார்.
எங்கே போனது மு.க.ஸ்டாலினின் புகார் பெட்டி? "திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, இதே இடத்தில் பொதுக் கூட்டம் போட்டு, புகார் பெட்டி வைத்து மக்களிடம் புகார் மனுக்களை வாங்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக அந்த புகார் பெட்டிக்கு பூட்டு போட்டு எடுத்துச் சென்றார். இன்று வரை மக்களின் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒருவேளை அந்த பேட்டியின் சாவியையோ அல்லது பெட்டியையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைத்திருப்பார் போல. திமுகவை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு, அவர்கள் வேட்டு வைத்துவிட்டார்கள். மக்களிடம் ஆசையை தூண்டி, அவர்களை ஏமாற்றி வருகின்றனர்" எனக் குற்றம் சாட்டினார்.
அதிமுகவின் எளிமையான வேட்பாளர்: மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நம்மை எதிர்த்து போட்டியிடுபவர்கள் செல்வம் படைத்தவர்கள், கோட்டீஸ்வரர்கள், பலம் பொருந்தியவர்கள். ஆனால் நமது வேட்பாளர் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மருத்துவர். அவரை வெற்றியடைய செய்ய வேண்டும்" எனக் கூறி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
இதையும் படிங்க: "சதுரங்க வேட்டை படப் பாணியில் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தது திமுக" - இபிஎஸ் சாடல்!