சென்னை: தமிழக சட்டசபையில் துணை பட்ஜெட் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விரைவாக முடிக்குமாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடக்கும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இதுவரை மொத்தமாக 119 நாட்கள் தான் பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் 400 நாட்கள் நடந்திருக்க வேண்டும்.
குறைந்த நாட்கள் நடத்திவிட்டு, 5 நிமிடத்திற்குள் பேச வேண்டும் என்றால் மக்கள் பிரச்சனையை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய சபாநாயகர், "அதிமுக ஆட்சியில் விவாதமே இல்லாமல் கூட அவை நிகழ்வு முடிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக தான் சட்டசபையை நடத்தும் நாட்கள் குறைந்துள்ளது" என்று அப்பாவு கூறினார்.
அதன் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்த புள்ளி அறிவித்து இறுதி செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்துக்கான எனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளேன்.
"உண்மைக்கு புறம்பாக": ஆனால், தமிழக முதலமைச்சர் உண்மைக்கு புறம்பான கருத்தை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். சுரங்கம் தோண்டுவதற்கு ஏலம் முறை சரியான ஒன்று என மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம் வரவேற்கத்தக்கது என்று அதிமுக நாடாளுமன்றத்தில் கூறியதாக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாக இருந்த காரணத்தினால் தான் தற்போது இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யும் அளவுக்கு நிலைமை போயுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்கள் மீது திமுக அரசு வேண்டுமென்றே குற்றம்சாட்டி வருகிறது.
"ஏலத்துக்கு உரிமை கோரி தான் கடிதம்": நீர்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமையை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்று தான் கடிதம் எழுதியுள்ளாரே தவிர, டங்ஸ்டன் சுரங்கம் அமையக்கூடாது என எந்த விதமான தகவலையும், மத்திய அரசுக்கு நீர்வளத் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கவில்லை.
"100 நாட்கள்.. வாக்குறுதி என்னாச்சு?: திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவோம் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 113 நாட்கள் மட்டுமே சட்டப் பேரவை கூட்டத்தை திமுக அரசு கூட்டி இருக்கிறது.
குறைவான நாட்களில் சட்டப்பேரவையை கூட்டுவதன் மூலம் மக்கள் பிரச்சனையை முழுமையாக பேரவையில் பேச முடியவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்படும் நேரத்தில் மக்கள் பிரச்சனையை முழுமையாக பேச முடியாத அளவுக்கு தான் குறைந்த அளவில் நேரம் ஒதுக்கப்படுகிறது.
இதையும் படிங்க : டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; "பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது" - அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அதிகளவில் சீர் கெட்டு இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றவாளிகளை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் மனநலம் குன்றிய மாணவியை 10க்கும் அதிகமான நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்று.
புயல் குறித்து ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தென்பெண்ணை ஆற்றில் இருந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு மட்டுமல்லாமல், விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. புயல் வெள்ளத்தால் பாதித்துள்ள விளைநிலங்களை முறையாகக் கண்டறிந்து, சேதமடைந்த உடைமைகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் குறித்து எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.
"181வது வாக்குறுதி": திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற 181 வது வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் இன்று பகுதிநேர ஆசிரியர்கள் போராடும் நிலைக்கு திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த 523 தேர்தல் வாக்குறுதிகளில் 10 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.