சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மொத்தமாக 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, பரப்புரையை தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணி: அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு 5 தொகுதிகள, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதி: ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஓய்வூதியம், 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி ரூ.450 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
தேர்தல் பரப்புரை: அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்சியிலிருந்து தனது தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவர பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில், நவலூர் குட்டப்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் பரப்புரை வீடியோ: இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல் அறிக்கை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்கள் பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகைகளையும் கேட்டறிந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்துள்ளோம்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.3000 ஆயிரம் வழங்க வேண்டும், வருடத்திற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டில் உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்.
மேலும், தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளையும், மாநில உரிமை பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கி அடிப்போம். வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மத்தியில் பாஜக ஆட்சியமைக்க திமுகவே ஆதரவளிக்கும்' - அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி - KC Veeramani Slams DMK