மதுரை: மதுரை கோச்சடையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஏற்றாத மின்கட்டணத்திற்காக ஸ்டாலின் சட்டமன்றம் முன்பாக போராட்டம் நடத்தியதாகவும், தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வைப் பரிசாக அளித்துள்ளதுள்ளார்" என்று அவர் விமர்சித்தார்.
"மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்குச் செல்லகூட மக்கள் அச்சப்படுவதாக கூறிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை புகழ்ந்து பேசி வாக்கு கேட்டதாகவும், ஆனால் மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளதாக கூறிய அவர், யானைக்கும் அடி சறுக்கும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த முடிவுகள் இறுதி இல்லை எனவும் அதிமுக மீண்டும் அரியணை ஏறும் எனவும் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி நாலரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்துள்ளதாகவும், 2026 இல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கிய தனத்தைப் பார்க்கப்போகிறீர்கள்" என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று ஒற்றை வரியில் செல்லூர் ராஜு பதிலளித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள ஈபிஎஸ் தலைமையில் அக்கட்சி தற்போது இயங்கிவரும் நிிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை தொடங்கி ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், அதிமுக தொண்டர்களை ஒன்றிணைப்பேன் எனக் கூறி, வி,கே.சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி படுகொலை.. சிறுவன் உட்பட 4 பேர் கைது.. விசாரணையில் அம்பலமான பின்னணி!