தஞ்சாவூர் : தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் பதவி பெற்றது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமர்சித்து பேசியிருந்தார்.
இதனைக் கண்டித்து கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில், தஞ்சை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அறிவொளி தலைமையிலான அதிமுகவினர் கட்சி கொடியுடன் திரண்டு வந்து, அண்ணாமலை உருவ பொம்மையை கொளுத்தியும், அதனை காலால் மிதித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி கைப்பற்றி சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதிமுகவினர் போராட்டத்தை முன்னிட்டு, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
பின்னர் செய்தியாளர்களிடம் அறிவொளி கூறியதாவது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கோடி தொண்டர்களின் பிரதிபலிப்பாக உள்ளார். அவரை நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் ஒருமையில் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
விமர்சனத்திற்கு எதிராக தஞ்சை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்துள்ளோம். அவர் இந்த விமர்சனத்தை தொடர்ந்தால், அவர் செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சாக்கோட்டை சதீஷ் குமார் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட பாஜகவினர் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் எடப்பாடி கே.பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து, அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரது உருவபொம்மையை தீயிட்டு எரித்த போது அவற்றை போலீசார் கைப்பற்றி தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பாஜகவினர் போராட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல், மயிலாடுதுறையில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தும், கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : "பாஜகவில் மூத்தவர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும்" - துரைமுருகனுக்கு மறைமுக அழைப்பு விடுத்த தமிழிசை? - tamilisai about durai murugan