திருச்சி: திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலை, காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார். மகா சிவராத்திரியை முன்னிட்டு, இக்கோயிலில் அகோரிகள் சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் ஈடுபட்டனர்.
சிவபெருமான் பிரம்ம ரூபத்தில் இருந்து லிங்க வடிவத்திற்கு மாறிய நாளை மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சிவபுராணம் படி, சிவபெருமானும், பார்வதி தேவியும் மகாசிவராத்திரி நாளில் திருமணம் செய்து கொண்டனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற சிவராத்திரியில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
அந்த வகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன் தினம் அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோர காளி கோயிலில் அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு, ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அஷ்ட காலபைரவர் முன் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில், நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
அகோரிகள் நடத்திய சிறப்பு பூஜையில், மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பியும் ஹர ஹர மஹாதேவ் என முழங்கி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாமக, விசிகவினர் மோதல்; திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் பதற்றம்.. போலீசார் தடியடி