மதுரை: விளாங்குடி பகுதியில் அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 53 அடி உயர கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சார்பில் கொடி மரத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில், ஏற்கனவே உள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, '' 53 அடி உயர கொடியை ஏற்ற காவல்துறையின் அனுமதி கேட்டபோது அனுமதி மறுத்தனர். அத்துமீறி கொடியேற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் கூறினாலும் அதிமுக இதற்கெல்லாம் அஞ்சாது. 53 அடி உயர கொடி ஏற்றுவதன் மூலம் என்ன ஆக போகிறது.? நேற்றைய தினம் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல், வகுப்பறையில் பெண் ஆசிரியர் படுகொலை, நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் வெட்டப்படுகிறார். சட்டம் ஒழுங்கு இன்றைக்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் திமுக அரசிற்கு குட்டு வைக்கிறார்கள்'' என்றார்.
சட்ட ஒழுங்கு சீர்கேடு
தொடர்ந்து பேசியவர், '' கள்ளச்சாராய விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை தேவை என கூறியுள்ளனர். ஆர்.எஸ்.பாரதி கூறுவது போல திமுக அரசு குறித்து எந்த நீதிபதியும் பாராட்டவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. நம் மக்களிடம் எப்படி சந்தித்து ஓட்டு கேட்பது என திமுகவினர் குழம்பி போய் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில் நிலவி வருகிறது.
இந்த ஆட்சியை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணியை எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுப்பார். அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு அதிகரித்ததா.? மோசமான சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருந்ததா.? திமுக அரசு குறித்து பேச வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.பாரதி பேசி வருகிறார்'' என விமர்சித்தார்.
திமுகவினர் பேசாத பேச்சா
மேலும், ''கஸ்தூரி ஒரு திரைப்பட நடிகை, அவரது 12 வயது மகன் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர். அவரது மகனை அவர்தான் பாதுகாக்க வேண்டும். மேலும், திமுகவினர் பேசாத பேச்சா கஸ்தூரி பேசியிருக்கிறார். கஸ்தூரியை பிடிப்பதற்கு காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து அவரை கைது செய்துள்ளது. ஆனால், செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் ஓர் ஆண்டு காலம் இருந்தாலும் அவரது தம்பியை இதுவரை தமிழக காவல்துறையினர் பிடிக்கவில்லையே ஏன்?'' என கேள்வி எழுப்பினார்.
திருமாவளவனுக்கு அழுத்தம்
விஜய் கட்சி குறித்து பேசிய செல்லூர் ராஜு, '' சமூக வலைதளத்தில் ஆயிரம் சொல்லுவார்கள். விஜயுடன் கூட்டணி என எங்கள் பொதுச் செயலாளர் தெரிவித்தாரா.? அல்லது விஜய் கூட்டணி குறித்து அறிவித்தாரா.? ஒரு இளைஞர் கட்சியை தொடங்குகிறார் அதனை நாங்கள் வரவேற்றோம். சகோதரர் திருமாவளவன் சமீப காலமாக திமுகவுடன் கூட்டணி அழுத்தத்தின் காரணமாக இது போன்று பேசுகிறார் (விஜய் கட்சி மாநாட்டில் பேசியதை திருமாவளவன் விமர்சித்து வருவது குறித்து)'' என்றார்.
மேலும், கட்சி சார்பாக பணிக்குழு அமைத்து தேர்தலுக்கான பணிகளை தொடங்க பொதுச் செயலாளர் உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026 தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். எங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றை கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சி பீர், கஞ்சா ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்கிறது'' என விமர்சித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்