திருப்பத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்துள்ளது. இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா, ஆம்பூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய விந்தியா, “பாஜக விஷம் என்றால், திமுக கெட்டுப்போன விஷம். பாஜக இந்து, இஸ்லாமியர் எனப் பிரிப்பார்கள். திமுகவினர் தகுதியானவர்கள், தகுதியில்லாதவர்கள் எனப் பிரிப்பார்கள். இரண்டும் இந்த நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையில்லாதவர்கள். திமுக பொறுத்தவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூஜா தூக்குபவர்களுக்கும், உதயநிதியிக்கு பல்லாக்கு தூக்குபவர்களும் தான் தகுதியானவர்கள். மக்களை ஏமாற்றி, மக்களை மதிக்காமல் இருக்கும் திருட்டு திமுக தேவையா? என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு ஏழை வீட்டில் எவ்வளவு செலவாகும் என்பது குறித்த வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கும், அமைச்சர் துரை முருகனுக்கும் தெரியுமா? திமுக கட்சியினர் பெண்களையும், தமிழக மக்களையும் மதிக்கமாட்டார்கள். சாதி, மதவெறி பிடித்த திருட்டு திமுக வேண்டுமா? மக்களிடம் கொள்ளையடிக்கும் திமுகவை இந்த தேர்தலில் தூக்கி எரிய வேண்டும் என்றார்.
வேலூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகிறார். பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள திமுக, பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வரும் கோட்டைக்கு முன்பாக பிரமாண்டமான மேடை அமைத்து காவிக்கொடி கட்டிக்கொண்டு இருக்கின்றனர். திமுகவின் வேஷத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு திமுக எதுவும் செய்யவில்லை; பாபர் மசூதி இடித்த பின்னர் திமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைத்தனர்.
திமுக ஆட்சியில் 3 ஆண்டு ஆட்சியில், 6 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைத்தது, திமுக. திமுகவினர் வெற்றி பெற்று வந்தால் ரூ.500-க்கு சிலிண்டர் அளித்தாலும் அதில் கேஸ் இருக்காது; ரூ.75-க்கு பெட்ரோலும், ரூ.65 டீசலும் தந்தாலும் கண் பார்வையில்லாத தகுதியான ஓட்டுநர்களுக்குத்தான் தருவேன் என்பார்கள் எனக் குற்றம்சாட்டினார்.
திமுக திராவிட மாடல் என ஏமாற்றும், பாஜக இந்திய மாடல் என ஏமாற்றும். கடவுளை திட்டிக்கிட்டே திமுக சாமி கும்பிடும். சாமியே திட்டுகின்ற அளவிற்கு பாஜக சாமி கும்பிடும். ஓட்டு என்னும் ஆயுதத்தை திமுகவிடம் கொடுத்தால் அதை அவர்கள் காங்கிரஸிடம் அடகு வைப்பார்கள். அதிமுக வென்றால் பாஜகவையும், காங்கிரஸையும் எதிர்ப்போம். தேர்தல் சமயத்தில் வரும் பிரதமரை தமிழ்நாட்டிலேயே தவம் கிடக்க வைப்போம்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - MK Stalin Tribute To Pugazhenthi