சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த மையக்குழு கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.
நடிகை கஸ்தூரி பேட்டி:
பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்றைக்கு முதல்முறையாக பாஜக தலைமை அலுவலக வாசலில் அடி எடுத்து வைத்தேன். நவம்பர் மாதம் நடைபெற்ற சர்ச்சையில் நான் கைது செய்யப்பட்டேன். அப்பொழுது அண்ணாமலை லண்டனில் இருந்தார். நான் வெளிய வந்த பிறகு அவரிடம் நான் தொலைபேசியில் பேசிய பிறகு, எனக்கு ஆலோசனை வழங்கினார். அவருக்கு நன்றி சொல்வதற்காக தான் நான் நேரில் வந்தேன்.
கடந்த ஒரு மாதமாக என்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது; அதைப் பற்றியும், அரசியல் பற்றியும் பேசினோம். திமுகவின் ஆட்சியை அகற்றிய பிறகு புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டுமென்றால் ஒருமித்த கூட்டணியாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
இளையராஜா பற்றிய சர்ச்சை குறித்த கேள்விக்கு, இளையராஜா ஒரு இசை கடவுள். அவர் கோயிலுக்கு போக வேண்டும் என்று அவசியமில்லை. இளையராஜா எங்கு போனாலும் அவரே ஒரு கோயில்; ஒரு கடவுள்தான். இளையராஜாவை கோயில் கருவறைக்குள் விடவில்லை என்று சர்ச்சை வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கருவறைக்குள் எந்த சாதியினரும் உள்ளே போக முடியாது. அது ராஜாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி கருவறைக்குள் போக முடியாது. அர்ச்சகர் மட்டும்தான் போக முடியும். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்.
அர்ச்சகர் எந்த சாதியாக இருந்தாலும் போக முடியும். இதுதான் விஷயம் இதை தான் திரித்து, பிரித்து பேசுகிறார்கள். இளையராஜா கருவறைக்குள் போக முயற்சி பண்ணவில்லை. இளையராஜாவுக்கு மரியாதை செய்ய வேண்டும். அவரை நில்லுங்கள் என்று தான் சொன்னார்கள். அதுதான் தற்பொழுது சர்ச்சையாக நிற்கிறது" என்றார்.
பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழக பாஜகவின் மையகுழு கூட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை வேகம் தமிழக பாஜகவிற்கு உத்வேகத்தை தந்தது.
தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் நின்று முழங்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் இருக்கும் கோடான கோடி மக்கள் ஒருங்கிணைந்து வருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு பிறந்துள்ளது. கட்சியின் அடிமட்ட தேர்தல் நாடு முழுவதும் ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பூத் நிலையிலும் கட்சியின் தேர்தல் முனைப்பு நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கிளைகளின் தேர்தல் முடிந்திருப்பதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான கிளைகளில் தேர்தல் நடத்துவதற்கான முனைப்பு நடந்து வருகிறது.
2025ம் ஆண்டு தமிழக பாஜகவிற்கு மாபெரும் எழுச்சி தரும் ஆண்டாக அமையும். அதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை படைக்கும்.
இந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் வாஜ்பாயின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது. இந்த நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கி அடிமட்ட மக்கள் மற்றும் கிராம மக்களுக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கி தந்து உலக அளவில் பெயர் வாங்கி தந்து இந்தியாவை உலகம் அறிய செய்தவர் வாஜ்பாய்.
இதையும் படிங்க: ஆண்டாள் அர்த்த மண்டபத்தில் இளையராஜா? - கோயில் நிர்வாகத்தின் விளக்கமும், இசைஞானி பதிவும்!
அவருடைய நூற்றாண்டு விழா புதிய இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக கொண்டாடப்பட வேண்டிய தினமாகும். அகில இந்திய அளவில் அதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவிலும் அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த விழாவை சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் எப்படி கொண்டு சேர்ப்பது என கேட்டறிந்தார்.
2012ல் வாஜ்பாயின் 88வது பிறந்த நாளை கொண்டாடிய போது, ஏழை குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதியாக ஐந்தாயிரம் கொடுத்தோம். இன்று 25 ஆயிரம் ரூபாய் ஏழை பெண்ணின் பெயரில் வைப்பு நிதி வைத்து அதை அவர்களது திருமணம் மற்றும் படிப்பிற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்கவிருக்கிறோம்.
திருமண வாய்ப்பு நிதி மட்டுமல்லாது திருமணத்திற்கு தேவையான செலவு முதல் அனைத்தையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியினர் 365 நாட்களும் தேர்தலை எதிர்ப்பார்கள்.
மீனவர்கள் பிரச்சனை குறித்த கேள்விக்கு, ஏற்கனவே வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா விண்ணப்பத்தை வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பி இருந்தார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஜனவரி 28ம் தேதி திருவனந்தபுரம் வருவார்கள். மீனவர்களுக்கு பிரச்சனை குறித்து இன்று இலங்கை அதிபருடன் பிரதமர் பேசுகிறார். இலங்கை பிரச்சனை பற்றி முழு விவரமும் தெரிந்த ஒருவர் பிரதமராக இருப்பது நமக்கு நல்லது" என்றார்.