விழுப்புரம்: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நேற்று விழுப்புரம் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை வழங்கி, அப்பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அரசமங்கலம் அரசு பள்ளிக்கு என்னால் முடிந்ததை செய்துள்ளேன். என்னுடைய சக்திக்குட்பட்டு அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன்.
நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். அரசு பள்ளிகளை சிலர் ஏளனமாக நினைக்கின்றனர். அவ்வாறு யாரும் கருதக்கூடாது. அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் முதன்மையானவையாக திகழ்கின்றன. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாணவர்கள் எந்த பள்ளியில் கல்வி பயிலுகிறோம் என்று பார்க்கக்கூடாது.
படித்த பள்ளியிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறோம் என மாணவர்கள் கருத வேண்டும். மாணவர்கள் செல்போனை எவ்வாறு தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்று ஆசிரியர்களும்,பெற்றோர்களும் சொல்லி தர வேண்டும். செல்போனில் டெக்னாலஜி என்ற பெயரில் வளர்ச்சியும் இருக்கிறது. பல தேவையில்லாத விஷயங்களும் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “அரசியலுக்கு வரவேண்டும் என சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்தால் செய்யட்டும், மக்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எல்லா அரசியல் தலைவர்களும் மக்களுக்கு நன்மை செய்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதும், மக்களுக்கு களத்திற்கு செல்கிறார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய தலைவரைத் தேடுகிறதா தமிழக பாஜக? அண்ணாமலை மீதான அதிருப்தியால் முடிவு என தகவல்! - TN BJP looking for a new leader