திருப்பத்தூர்: பாஜக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அஸ்வத்தாமன் என்பவருக்கு ஆதரவாக திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திருப்பத்தூர் பேருந்து நிலையம், தண்டபாணி கோயில் தெரு, பஜார் தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பாஜக நிர்வாகி ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன போது, அந்த பெண் குழந்தைக்கு கூல் சுரேஷ், ரிஷிதா தாமரை என பெயர் சூட்டினார். பின்னர் கூல் சுரேஷ் சிறிது நேரம் கழித்து அவருடைய அருகில் நின்று கொண்டிருந்த 45 வயதுடைய மதிக்கத்தக்க நபரிடம் தங்களுடைய பெயர் என்ன என்று கேட்டார். அப்போது அந்த நபர் கிருஷ்ணமூர்த்தி என்று கூறிய போது, இனி உங்கள் பெயர் தாமரைக்கண்ணன் எனக் கூறி அலப்பறையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் அப்பகுதியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின்னர் அருகே இருந்த டீ கடைக்கு சென்று டீ போட்டுக் கொடுத்து வாக்குகள் சேகரித்தார். மேலும் "ஜாடிக்கேத்த மூடி, அது நம்ம மோடி" என பஞ்ச் டயலாக் கூறினார். மேலும் நான் போடுவது சாதாரண டீ இல்ல, இது மோடி எனவும் நகைச்சுவையாக பேசி வாக்குகள் சேகரித்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அத்தை, மாமா, சித்தப்பா என கண்ணீர் மல்க வாக்கு கேட்ட திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர்! - Lok Sabha Election 2024