சென்னை: தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் தன்னுடன் வசித்து வந்த தாயையும், தம்பியையும் கொலை செய்துவிட்டு சிக்கியுள்ள மூத்த மகன் தானும் சாக போகிறேன் என்று போலீசிடம் கூறியுள்ளார்.. சென்னையை உலுக்கியுள்ள இரட்டை கொலை சம்பவம் நடந்தது எப்படி?
சென்னை திருவொற்றியூர் திரு நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மா (45). இவர் அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்து வந்தார். பத்மாவின் கணவர் முருகன் ஓமன் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு நிதிஷ் குமார், சஞ்சய் என இரண்டு மகன்கள் உள்ளனர். நிதிஷ் குமார் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். சஞ்சய் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சென்னையில் இரட்டை கொலை: இந்த நிலையில், நிதிஷ் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பெரியம்மாவின் மகளான அக்கா மகாலட்சுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பையில் செல்போன், தாங்கள் வசித்து வந்த வீட்டின் சாவி ஆகியவற்றை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
கோணி மூட்டையில் சடலம்: இந்த நிலையில், நேற்று மகாலட்சுமி நிதிஷின் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது, அவர் சில வாய்ஸ் மெசேஜ்களை வைத்துள்ளார். அதில், நிதிஷ் ''தனது அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்து விட்டதாக'' பேசியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன மகாலட்சுமி நிதிஷ் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டுக்குள் பத்மாவும், சிறுவன் சஞ்சய்யும் கொலை செய்யப்பட்டு கோணி மூட்டையில் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
இதை பார்த்து அலறிய மகாலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார். உடனே அங்கிருந்து இரவு பணியில் இருந்த புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜூக்கு அலெர்ட் செய்துள்ளனர். பின்னர், அவர் நேரில் வந்து விசாரணை செய்து தொலைபேசி மூலம் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையரின் தனிப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாயமான நிதிஷை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது, திருவெற்றியூர் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உள்ள பழுதடைந்த கப்பலில் நிதிஷ் போதையில் படுத்து உறங்கி இருப்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் கைது செய்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், நிதிஷ் '' நானும் இறக்கப் போவதாகவும், அதனால் தான் போகும் போது அம்மாவையும், தம்பியையும் அழைத்துச் செல்ல போகிறேன்'' என அவர் அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜில் கூறியிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், நிதிஷ் எதற்காக தாய், தம்பியை கொலை செய்தார் என்ற கோணத்தில் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் சாராயம் குடித்த சென்னை கூலி தொழிலாளி.. மருத்துவமனையில் சிகிச்சை தீவிரம்!