சென்னை: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்ததற்காக 7 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது, கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், நேற்று மாலை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வைத்து 7 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அவர்களிடமிருந்து 250 கிராம் மெத்தபெட்டமைன் எனும் ஒரு வகையான போதைப் பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிளமிங் பிரான்சிஸ் (21), பூந்தமல்லியைச் சேர்ந்த நவீன் (22), கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த பிரவீன் பிரணவ் (21), நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த கிஷோர் (21), ஞான பாண்டியன் (22), கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண்குமார் (22), மணலியைச் சேர்ந்த தனுஷ் (23) என்பது தெரியவந்தது.
பல நாட்களாக திட்டம்: மேலும், பிரவீன் பிரணவ், கிஷோர், நவீன், தனுஷ் ஆகிய நான்கு பேரும் ராமாபுரத்தில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும், ஞான பாண்டியன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வேதியியல் பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சேர்ந்து கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரவீன் பிரணவ் என்பவர் வீட்டில் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை தயாரிக்க, பல நாட்களாக திட்டமிட்டு அதற்கான பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதற்காக இவர்கள் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை அருண்குமார் மூலம் வாங்கியதும், அதற்கு தனுஷ் என்பவர் ரூ.3 லட்சத்தை பிரவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார் என்பதும், அந்த பணத்தை வைத்து மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் தயாரித்து அதை விற்பனை செய்யும் போது லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டு, வீட்டிலேயே ஆய்வகத்தை வைத்து, குறிப்பிட்ட போதைப் பொருளை தயாரித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் அது சரியாக வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்