விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சித்தர்களின் சொர்க்க பூமி என்றழைக்கப்படும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சதுரகிரி கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்ததால், மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களான 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 3 அன்று முதல் ஜூலை 6 வரை என நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.
பின்பு, காலை 6 மணிக்கு சதுரகிரி கோயில் நுழைவு வாயில் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்பு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், மலை ஏறும் பக்தர்களைத் தீவிர சோதனைக்குப்பிறகே வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு - Thoothukudi murder case