மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் விமான நிலையம் செயல்பட வேண்டும் என தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
அதாவது, மதுரை விமான நிலையம் காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் வகையில், சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதுடன், அதற்கேற்ற வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை விமான நிலையம் இன்று (அக்.1) முதல் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இரவு நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று மதுரை விமான நிலைய ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில், இன்று முதல் 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்படத் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்