கோயம்புத்தூர்: கோவை மாநகர் கெம்பட்டிகாலனி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது இளைய மகன் கோகுல் கிருஷ்ணன் (24). ரவிசங்கர் நகை பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் மெசின் கட்டிங் தொழிலும், இளைய மகன் கோகுல் கிருஷ்ணன் செயின் தொழிலும் செய்து வருகின்றனர்.
இவரது வீட்டில் அருகே உறவினர் (மச்சான்) தனசேகர் வசித்து வருகிறார். தனசேகர் வீட்டிற்கு அருகில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிவகுமார் வீட்டில் ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் வைத்து கேட்டுள்ளார். இது தனசேகருக்கு இடையூறாக இருந்ததால், இது குறித்து சிவகுமாரிடம் கேட்டபோது, சிவக்குமாரும் அவரது வீட்டில் இருந்த பிரவீன் என்பவரும் தனசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கோகுல்கிருஷ்ணன், சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்த பிரச்சனை அப்போது சமாதானம் ஆக்கப்பட்ட போதிலும் கோகுல்கிருஷ்ணன், சிவக்குமார்-பிரவீன் ஆகியோர் மீது கோபமாகவே இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ரவிசங்கரின் மூத்த மகனுக்கு திருமணம் நடந்த நிலையில், ரவிசங்கர் அவரது இளைய மகன் கோகுல் கிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டார். ஆனால், தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும், திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போன கோகுல் கிருஷ்ணன் என்ன ஆனார்? அண்ணனுக்கு திருமணம் நடந்தபோது எங்கு இருந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாவது;
ரவிசங்கரின் மூத்த மகன் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கோகுல் கிருஷ்ணன் மதுபோதையில் கெம்பட்டி காலனி அசோக் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சிலை இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, கோகுல்கிருஷ்ணன் மற்றும் சிவக்குமார் தரப்பு இளைஞர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமாதான பேச்சுவார்த்தைக்காக அப்பகுதியில் உள்ள கண்ணாடி குடோன் அருகே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது எதிர்தரப்பினரான பிரவின்குமார், சந்துரு ஆகியோர் கோகுல் கிருஷ்ணனை கத்தியால் தாக்கி உள்ளனர்.
இதில் கோகுல் கிருஷ்ணனுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெறியேறிய நிலையில் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய கோகுல்கிருஷ்ணன், பாலாஜி அவென்யூ பகுதிக்கு வந்த போது, அதிக ரத்தம் வெளியேறியதால் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். பின்னர் இது குறித்து செல்வபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோகுல் கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (20), பிரவீன்குமார் (எ) ஜப்பான், சூர்யா (26), சந்துரு (24), சஞ்சை (18) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன?