சென்னை: சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வரவேற்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு பிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பிரியாவின் தோழிகளான சுபா, கீர்த்தி மற்றும் ஆண் நண்பர்களான பயாஸ், ஸ்ரீநாத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அவர்கள் இந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதில், ஸ்ரீநாத் அந்த சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு அந்த சிறுமி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுபா வீட்டுக்கு சிறுமி சென்றார்.
அப்போது, ஸ்ரீநாத் சிறுமியை பின் தொடர்ந்து வந்துள்ளார். அதன் பின்னர் சுபா வீட்டில் இருந்தபோது சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் சுபா மற்றும் கீர்த்தி ஆகியோர் சேர்ந்து சிறுமிக்கு இரண்டு மாத்திரைகளை கொடுத்துள்ளனர். அந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு சிறுமி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
கண்விழித்து பார்த்த போது சிறுமியை ஸ்ரீநாத் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது. பின்னர், அன்று முதல் ஸ்ரீநாத் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் நடவடிக்கையை வைத்து, அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அரசு குழந்தைகள் இல்லத் தரப்பினர், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீநாத்தை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநாத்திடம் விசாரணை செய்ததில், போதை மாத்திரையை கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீநாத்துக்கு உடந்தையாக இருந்த சுபா, கீர்த்தி, பிரியா மற்றும் பயாஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "முன்விரோத கொலைகளுக்கும் சட்டஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை" - துரைமுருகன் பேட்டி!