தூத்துக்குடி: கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மகன் அகஸ்டின். பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் எக்ஸிக்யூட்டாக பணியாற்றி வரும் இவருக்குத் திருமணமாகி 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், மந்திதோப்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் தனி நபர் கடன் பெற்றுள்ளார். அதனை மாத வசூல் செய்வதற்காக வீட்டிற்கு வந்த அகஸ்டினுக்கும், கடன் பெற்ற நபரின் மகளுக்கும் பழக்கமாகி, இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆகையால் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் அகஸ்டினிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அப்போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதால், கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து வீட்டில் யாரிடமாவது தெரிவித்தாலும் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் அப்பெண்ணை அகஸ்டின் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த அப்பெண் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அகஸ்டின் பஜாஜ் பைனான்ஸில் கடன் வாங்கிய பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அகஸ்டினைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்