கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, திருப்பூர் வரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்குச் சென்ற தங்களது மகள் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தேடிவந்தனர். மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக, நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை ஒரு இளைஞர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசாரின் விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞரின் செல்போன் டவர் திருப்பூரில் இருந்துள்ளது. பிறகு அங்கு விரைந்த நாகர்கோவில் போலீசார், திருப்பூரில் வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டதுடன் மாணவியுடன் இருந்த இளைஞரை கைது செய்தனர்.
அதன் பின்னர், இருவரையும் மீட்டு நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் 17 வயது மாணவி மற்றும் இளைஞர் என இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர் பிரகாஷ் என்பதும்; இவர் மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி, நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலமாக திருப்பூருக்கு அழைத்துச் சென்று வாடகை வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதோடு தன்னை சுமார் 12 நாட்களாக கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அம்மாணவி கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகாஷ் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி, திருப்பூர் வரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஜாபர் சாதிக் குறித்து தகவல் அளிக்க தமிழ்நாடு காவல்துறை தயார்' - டிஜிபி சங்கர் ஜிவால்