கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சரோஜினி (72). இவர் பணி ஓய்வு பெற்று கோவையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பொங்கல் தினத்திற்கு வால்பாறைக்கு பென்ஷன் பணம் வாங்க வந்த சரோஜினி தொழிலாளர் குடியிருப்பில் தனியாக தங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ரத்த வெள்ளத்தில், துணிகள் விலகிய நிலையில் சரோஜினி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
தொடர்ந்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில், துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணா, ஸ்ரீநிதி, ஆய்வாளர்கள் ஆனந்தகுமார் தாமோதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கனிமவள கொள்ளையை எதிர்த்ததால் லாரி ஏற்றி கொலை? ஜகபர் அலி மரண வழக்கில் 4 பேர் கைது!
விசாரணையில், இந்த சம்பவத்தில் மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் லோயர் பாரளை எஸ்டேட் தொழிற்சாலை அருகில் குடியிருந்து வரும் ரங்கநாதனை (24) அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரங்கநாதன் குடிபோதையில் சம்பவ நாள் அன்று சரோஜினி வீட்டருகே மரம் வெட்ட சென்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரோஜினியை ரங்கநாதன் தான் வைத்திருந்த அரிவாளால் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதனால் மயக்கம் அடைந்த சரோஜினியை தூக்கிக் கொண்டு சரோஜினி வீட்டுக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சரோஜினி ரத்த வெள்ளத்தில் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலைச் சம்பவம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.