மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிக்கும் குடோன் அதே பகுதியில் இரும்பு சீட் கொண்ட தகரக் கொட்டகையில் அமைந்துள்ளது. இங்கு நாட்டு வெடிகள், திருமணத்திற்குத் தேவையான வானவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இரண்டு மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, வானவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று இந்த குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவாவடுதுறையைச் சேர்ந்த கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும், கலியபெருமாள், லெட்சுமணன், குமார் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். குத்தாலம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே, உயிரிழந்தவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆய்வு செய்தனர்.
இந்த வெடி விபத்தில் கர்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில் லட்சுமணன், கலியபெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட உள்ளதாகவும், அரசு விதிமுறைக்கு உட்பட்டு கிடங்கு செயல்படுவதாக உரிமையாளர் தரப்பில் கூறுகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக 3 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், சிகிச்சைப் பலனின்றி லட்சுமணன் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது வரை வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கைவிலங்குடன் தப்பிச் சென்ற காட்பாடி விசாரணைக் கைதி கைது!