சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தாபுரம் கரவான்படி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமலு. இவர் சென்னையில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக சித்தப்பா கமல் என்பவருடன் இணைந்து, சாமுண்டீஸ்வரனுக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 22) அட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் மேற்கூரையில் மெட்டல் ஷீட் போடுவதற்காக வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது, 5 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக வெல்டிங் வேலை செய்த ஸ்ரீ ராமலு தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முயன்று, 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ரீ ராமலுவை சோதித்துப் பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் நிலைய போலீசார் ஸ்ரீ ராமலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வானகரம் பகுதியில் வெல்டிங் வேலை செய்யும் போது 5 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கோர விபத்து.. கரூரில் ஒரே குடும்பத்தை 3 பேர் பலி; இருவர் படுகாயம்!