சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் கால்நடை மருத்துவர் வல்லையப்பன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் நாய்களால் கடிபட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்தார்.
சுமார் 200 கிராம் எடையிலிருந்த அந்த குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்தேன். மேலும், அந்த குரங்கு குட்டியின் இடுப்பு பகுதியில் அதிக காயம் இருந்தது. அந்த குரங்கால் சுயமாகவும் இயல்பாகவும் செயல்பட முடியாத்தால் தனது சிகிச்சை கட்டுப்பாட்டில் வைத்து சிகிச்சை அளித்தேன்.
இதையும் படிங்க : "பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?"- உயர்நீதிமன்றம் வேதனை!
சுமார் 10 மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு, குரங்கு குட்டி சற்று குணமானது. இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் அந்த குரங்கு குட்டியை கடந்த அக் 26ம் தேதி தன்னிடமிருந்து வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டனர். இதனால் அந்த குரங்கு குட்டியின் உடல்நிலை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளது.
குரங்கு குட்டிக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும். குரங்கு குட்டிக்கு சத்தாண உணவு தர வேண்டும். எனவே, குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் விட வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நாளை (நவ 06) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்