சென்னை: வங்க கடலில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டிருப்பதால் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் உள்ள 200க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி பூங்காங்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னையின் பல்வேறு சாலைகளில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களின் கிளைகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ளன. எனினும் கூட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. முறிந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கதீட்ரல் சாலையில் சாலை ஓரமாக இருந்த 30 வருட பழமையான மரம் காற்று மற்றும் மழை காரணமாக திடீரென்று வேரோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால், சென்னை கடற்கரை சாலையில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை... வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!
அருகே இருந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கிளைகளை தங்கள் கைகளால் உடைத்து வாகனங்கள் செல்லும் அளவிற்கு தற்காலிக வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். அதன் பின்னர் அரிவாளுடன் உதவியோடு மரத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த மரத்தை முற்றிலுமாக அகற்றினர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து முழுமையாக சீரானது.
இது குறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சி ஊழியர் ஒருவர், "மரங்கள் முறிந்து விழுந்த பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்," என்றார். இதே போல ஆவடி அருகே தென்னை மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்தது. அதனை அந்தப் பகுதி மக்களே உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.