வேலூர்: வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்களிடையே கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதில், பள்ளி வளாகத்திற்குள் ஒரு மாணவனை சக மாணவன் பிளேடால் சரமாரியாக கீறியுள்ளார்.
இதில் அந்த மாணவனுக்கு தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்று பகுதியில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதா? நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி! - Earthquake in Nellai Tenkasi
இந்த வழக்கில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பிளேடால் கீறிய மாணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பிளேடால் வெட்டிய மாணவனின் தம்பி அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
தம்பியை பாதிக்கப்பட்ட மாணவன் கிண்டல் செய்ததால், அதனைத் தட்டிக்கேட்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், பிளேடால் வெட்டியதாக மாணவன் கூறியுள்ளார். பின்னர் பிளேடால் வெட்டிய மாணவனை கைது செய்த போலீசார் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள சிறார் இல்லத்தில் அடைத்தனர்.