சென்னை: சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 182 பயணிகளுடன் நேற்று (பிப்.27) நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சுதர்சன் (36) என்ற பயணி, திடீரென விமானத்திற்குள் புகை பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சக பயணிகள் கண்டித்ததால், அவர் விமானத்தின் கழிவறைக்குள் சென்று அவ்வப்போது புகை பிடித்தார் என்றும், இது விமானப் பணிப்பெண்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் சுதர்சனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், விமானத்தினுள்ளோ அல்லது விமானத்தின் கழிவறையினுள்ளோ விமான பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின் படி, யாரும் புகை பிடிக்கக்கூடாது என்று எடுத்துரைத்துள்ளனர். ஆனாலும், சிங்கப்பூர் பயணியான சுதர்சன், விமானத்தின் கழிவறைக்கு அவ்வப்போது சென்று புகை பிடிப்பதைத் தொடர்ந்துள்ளார்.
இதனை அடுத்து, விமானப் பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் சுதர்சன் செயல்பாடு குறித்து புகார் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விமானம் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்திற்குள் சென்று, விமான பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக புகைபிடித்த சிங்கப்பூர் பயணி சுதர்சனை விமானத்தில் இருந்து அழைத்து வந்து, குடியுரிமை சோதனை மற்றும் சுங்கச் சோதனையை முடித்துவிட்டு, சுதர்சனை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையப் போலீசார் சுதர்சனிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அவர் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துள்ளார் என்றும், இப்போது சென்னையில் உள்ள அவருடைய நண்பரைப் பார்ப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சுற்றுலாப் பயணி விசாவில் சென்னை வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியில் கனிமொழி பெயரை கூறாமல் கடந்த பிரதமர் மோடி!