தேனி: அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ஹரி(18). 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர இருந்தார். இந்நிலையில் தற்போது, விடுமுறை நாட்களில் பகுதிநேர வேலைப்பார்ப்பதற்காக தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள வெற்றி திரையரங்கம் அருகே உள்ள மர அறுவை மில்லில் வேலைப்பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதிய உணவு வாங்குவதற்காக திரையரங்கம் அருகில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியாக தாறுமாறாக ஓடிய நிலையில் வந்த மினி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மாணவன் ஹரி மீது மோதியது. அதோடு, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூதிப்புரத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் இந்த மினி பஸ் ஓட்டி வந்த நிலையில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இவ்விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து மோசமான நிலையிலும், முறையான ஆவணங்கள் இன்றி இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வாகனத்தை ஓட்டிய அஜித் என்பவர் இந்த விபத்து வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக தனக்கு வலிப்பு வந்ததாக கூறினாரா? அல்லது வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி கனவோடு குடும்ப கஷ்டத்திற்காக விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு சென்று வந்த ஹரி என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தேனி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஒரு கிராமத்தின் கடைசி கதை... நிறைவேறாத ஆசையோடு காற்றில் கலந்த கிராமத்தின் கடைசி மனிதர்! - Meenakshipuram Village