ராணிப்பேட்டை: திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த பெண் கணவன் மற்றும் ஒரு வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் இந்த வழக்கில் இருந்து பெண்ணின் காதலன் விடுவிக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தவெளி தெருவை சேர்ந்தவர் தீபிகா (25). இவரது கணவர் ராஜா (28). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது.
இந்த நிலையில், தீபிகாவுக்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, தீபிகா கடந்த 2019ம் ஆண்டு, ஜெயராஜ் உடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரை ஓரமாக புதைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!
இருவரும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இவ்வழக்கு ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி செல்வம் இவ்வழக்கின் தீர்ப்பினை வழங்கினார்.
நேற்று இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பினரையும் விசாரித்த நீதிபதி, ராஜா (28) மற்றும் ஒரு வயது மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், வழக்கிலிருந்து ஜெயராஜை விடுவித்தார். இதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமிய காவல் நிலைய நீதிமன்ற சிறப்பு ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் தீபிகாவை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்