தருமபுரி: தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, சென்னையில் பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “ஒரு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் கோடி ஊழல் செய்த ஆ.ராசா, எம்ஜிஆரைப் பற்றிப் பேச எந்த வகையிலும் தகுதி இல்லாதவர். மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர், எம்ஜிஆர். அவரைப் பற்றி இந்த தேர்தல் வரக்கூடிய நேரத்தில் பேசினால், நம்முடைய பெயர் தமிழகம் முழுவதும் வரும் என்ற நோக்கத்தில் ஆ.ராசா பேசியிருக்கிறார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்று 32 மாதங்களாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகிறது. தினமும் கொலை கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் தடையில்லாமல் வழங்கினார். எடப்பாடி ஆட்சியில் வசதி படைத்தவர்கள், வசதி அற்றவர்கள் என பிரித்துப் பார்க்காமல், ஒரே கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு மக்களைப் பார்த்த தலைவர்.
திமுக, தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இன்று ஒரு கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். கடந்த மாதம் வாங்கியவர்களுக்கு இந்த மாதம் இல்லை, எனவே எப்படி ஆட்களைக் குறைப்பது என்று திட்டம் தீட்டிக் குறைத்து வருகிறார்கள்.
2 கோடியே 70 லட்சம் குடும்ப அட்டைகள் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் பாதி நபர்களுக்குத்தான் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் அனைத்திற்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறத்திலும் வரியை உயர்த்தக் கூடிய சூழ்நிலையில்தான் திமுக அரசு செயல்பட்டு வருவதாக” குற்றம் சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை.. கிளாம்பாக்கம் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்!