சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் 5வது பட்டாலியன் காவல் படையில் பணிபுரிந்து வருபவர், அப்துல் ரஹ்மான். இவர் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலி ஒன்றில், கொரட்டூரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரை தொடர்பு கொண்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் அந்த இளைஞர், காவலர் அப்துல் ரஹ்மான் கூறியபடி, திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார். அங்கு அப்துல் ரஹ்மானின் குடியிருப்பில் அவரது சகோதரர் மற்றும் 3 நண்பர்கள், அந்த 24 வயது இளைஞருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கிருந்த காவலர் அப்துல் ரஹ்மான் உள்பட அனைவரும் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த இளைஞரிடம் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் 25,000 ரூபாய் பணத்தினை இணையவழி பணப்பரிவர்த்தனை செயலி மூலம் பெற்றுக் கொண்டு அடித்து துரத்தியுள்ளனர்.
இதன் பின்னர், அங்கிருந்து தப்பித்த அந்த இளைஞர், அருகில் இருந்த திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், காவலர் குடியிருப்புக்குச் சென்று சோதனை நடத்தி உள்ளனர். அப்போது, காவலர்கள் வருவதை அறிந்துகொண்ட அப்துல் ரஹ்மான், அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இதில் காவலர் அப்துல் ரஹ்மான் மற்றும் அவரது நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் ஆகிய இருவரையும் பிடித்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்துல் ரஹ்மானின் சகோதரர் உள்பட மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் டவரே டார்கெட்.. தமிழகத்தில் திருடி டெல்லியில் விற்பனை.. பலே கும்பல் சிக்கியது எப்படி?