திருநெல்வேலி: ஈரோடு மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை செல்லும் தினசரி பயணிகள் ரயில் நெல்லை மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு - செங்கோட்டை பயணிகள் ரயில் நேற்று இரவு வழக்கமாக வரும் நேரத்திற்கு நெல்லை சந்திப்பை அடைந்துள்ளது.
அப்போது, ரயில் இன்ஜினின் முன்புறம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரின் உடல் சடலமாகச் சிக்கி இருப்பதைக் கண்டு ரயில் பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ரயிலே இருப்புப்பாதை போலீசார், ரயில் இன்ஜினில் சிக்கியிருந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம், ரயில் நிலையத்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ரயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாழையுத்து ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தபோது ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த உடல் ரயில் இன்ஜின் முன்பகுதியில் சிக்கி நிலையில், முதியவரின் உடல் சிதைந்த நிலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
பின்னர் ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்து நிற்கும்பொழுது, பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பார்த்து தகவல் தெரிவித்த நிலையிலேயே உடல் ரயிலில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.