தூத்துக்குடி: தெர்மல் நகர்ப் பகுதியின், கோவில்பிள்ளை நகர் 6வது தெருவில் வசித்து வருபவர் தங்கராஜ். இவர் ஒப்பந்த அடிப்படையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் (NTPL) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (27). இந்த தம்பதியினருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது நந்தினி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் இவர் வசித்து வரும் காம்பவுண்ட் வீட்டின் முன் பகுதியில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை வீசி, தானும் அதே தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டனர்.
ஆனால் நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனிடையே உயிருக்கு பேராடிய நிலையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை போகும் வழியில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் தலைமையிலான போலீசார் இறந்த நந்தினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது மகனை நீர்தேக்கத் தொட்டியில் வீசி, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவு!