மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, ஈச்சங்குடி ஊராட்சி பில்லா விடந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்டு (24), ஜோதிபாசு (32) ஆகிய இருவரும் கடந்த ஜூலை 9ஆம் தேதி மாலை 6.45 மணியளவில், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவே ஜெரால்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் ஜோதிபாசுவிடம் விசாரணை செய்தபோது, தன்னிடம் சண்டையிட்ட மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், விரக்தியில் மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஜெரால்டு, தான் குடித்துக் கொண்டிருந்த விஷம் கலந்த மதுபானத்தை வாங்கி குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜோதிபாசு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், போலீசார் இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். விஷம் கலந்த மது அருந்திய நண்பர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக அப்பகுதியினரால் கூறப்பட்டதால், நண்பர்கள் இருவருக்கும் முன்விரோதம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த 10ஆம் தேதி மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஜெரால்டு உடலை உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், ஜெரால்டு உடலை அடக்கம் செய்யாமல் செம்பனார்கோயில் அருகே உள்ள கடலி சாலையில் கடந்த 11ஆம் தேதி மதியம் கொண்டு வந்து வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறையார் அருகே பாலூர் கிராமத்தில் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் ஜெரால்டு, ஜோதிபாசு ஆகிய இருவருக்குமிடையே பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து ஜெரால்டுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
ஆதலால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 6 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் டிஎஸ்பி திருப்பதி ஆகியோர் வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று ஜெரால்டு உடலை அடக்கம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜோதிபாசுவிடம் விசாரிக்க வேண்டும் என்று போலீசார் திருவாரூர் சென்றபோது, அவர் சிகிச்சை முடிந்து வீடு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஜோதிபாசுவை பிடித்து பெரம்பூர் காவல்நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஜோதிபாசு கைக்குழந்தையுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பொறையார் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுடன் ஜோதிபாசுவுக்கு, திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதை அறிந்த ஜோதிபாசுவின் மனைவி, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூருக்குச்ஹ் சென்று விட்டார்.
இந்நிலையில், தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் ஜெரால்டு போனை வாங்கி திருமணத்திற்கு மீறிய உறவு வைத்த பெண்ணுடன் ஜோதிபாசு பேசியுள்ளார். ஜோதிபாசு பேசிய அப்பெண்ணின் நம்பருக்கு ஜெரால்டு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக பேசி ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, ஜெரால்டை கொலை செய்ய முடிவு செய்து காரைக்கால் மாவட்டம், நல்லாத்தூர் பகுதிக்குச் சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு, நல்லாடை கிராமத்தில் உள்ள மருந்துக் கடையில் தென்னை மரத்துக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலையும் வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
பில்லா விடந்தை அருகை தென்னைமரச்சாலையில் அமர்ந்து மதுவில் பூச்சிமருந்தை கலந்து ஜெரால்டுவிற்கு கொடுத்துவிட்டு திருமணத்திற்கு மீறிய பெண்ணுக்கு போன் செய்து ஜெரால்டு விஷம் கலந்த மதுபானத்தை குடித்துவிட்டதால் இனி தொல்லை இல்லை என்று கூறியுள்ளார்.
தன் மனைவி கோயம்புத்தூர் சென்று விட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து வைத்திருந்ததை ஜெரால்டு எடுத்து குடித்து விட்டார் என்று நாடகமாடி அனைவரும் சந்தேகப்படகூடாது என்பதற்காக விஷம் கலந்த மதுவை சிறிது குடித்துவிட்டு தப்பிப்பதற்காக வாந்தி எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஜோதிபாசு, ஜெரால்டு மற்றும் திருமணத்திற்கு மீறிய பெண் ஆகியோரின் செல்போன்களைக் கைப்பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்த தகவல்கள் மூலம் ஜெரால்டு கொலை செய்யப்பட்டதை உறுதிபடுத்திய பெரம்பூர் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை செம்பனார்கோயிலில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டெடுப்பு! - old pot found with tamil script