திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் அன்பு (55). இவர் அதேபகுதியில் தன்னுடைய வீட்டின் அருகாமையிலேயே முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இவருடைய கடைக்கு எவரும் முடிதிருத்தும் செய்ய வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இதன் காரணமாக போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், அவர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதனால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.4) வீட்டை விட்டுச் சென்றவர் சென்ற அன்பு, வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் அன்பு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடலை மீட்டு, திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர், திருப்பத்தூர் கிராமிய போலிசார் தற்கொலை செய்து கொண்ட அன்பு உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றி துரைசாமி; 5வது நாளாக தொடரும் தேடுதல் பணியில் இணைந்த கப்பற்படையின் சிறப்பு குழு!