ஈரோடு: சக்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை 2 பேர் தங்கி இருந்து பின்னர் அறையை காலி செய்து விட்டு சென்றனர். அவர்கள் தங்கி இருந்த அறையை ஊழியர் சுத்தம் செய்த போது, அவர்கள் தலையணை அடியில் ஒரு நாட்டு துப்பாக்கியும். தோட்டாக்களும் இருந்தது. விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் படி, ஈரோடு நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விடுதிக்கு வந்த ஈரோடு நகர காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் கைப்பற்றி தனியார் விடுதி மேலாளர், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும், சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து, துப்பாக்கியுடன் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த நபர்கள் குறித்து அடையாளம் கண்டுபிடித்தனர்.
அந்த நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜவகர் உத்தரவின் பெயரில், டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் டெல்லி விரைந்து சென்றனர். அங்கு தனியார் தங்கும் விடுதியில் 6 தங்கி இருந்த 2 நபர்களின் போட்டோ மற்றும் வீடியோக்களை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பாலாசோர் ரயில் விபத்து போல கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்ததா?
இந்த தேடுதல் வேட்டையில் டெல்லியைச் சேர்ந்த முகமது மகன் சாரிப்கான் (24) என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக ஈரோட்டிற்கு ரயில் மூலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், ஈரோடு நகர காவல் துறையினர் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த இரண்டு பேர் சட்டவிரோதமாக துப்பாக்கியுடன் விடுதியில் தங்கி இருந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்