தேனி: தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி (74) சென்னை ஐஐடியின் முன்னாள் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். இவருக்கு கடந்த மே மாதம் 18ஆம் தேதி, மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தொலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர் பானுமதியிடம், உங்கள் ஆதார் கார்டு மூலம் சிம் கார்டு ஒன்று வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த எண் மும்பை கனரா வங்கியில் இணைக்கப்பட்டு பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றத்திற்காக டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம் எனக் கூறி அவரை தனி அறையில் அமர சொல்லி வீடியோ கால் மூலம் காவல்துறையினர் போல் நடித்து அவரிடம் உள்ள வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி உள்ளனர்.
மேலும் அந்த வங்கி கணக்கில் உள்ள 84.5 லட்சம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். பயந்து போன பானுமதி, அவர்கள் கூறியது படி அந்த பணத்தினை அவர்களது வங்கி கணக்கு அனுப்பியுள்ளார். பணம் சென்று அடைந்த உடனே அவர்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்து போன பானுமதி, தேனி சைபர் கிரைம் காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிப்படையினர் மோசடியில் ஈடுபட்ட நபரின் அலைபேசி மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது டெல்லி துவாராக பகுதியைச் சேர்ந்த அப்ஜித்சிங் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லி விரைந்து சென்று அப்ஜித்சிங்கை கைது செய்த தனிப்படை போலீசார், அப்ஜித்சிங் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்த வங்கிக் கணக்கை முடக்கம் செய்து, 103 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 28 வங்கி கணக்கு புத்தகங்கள், ஐந்து செல்போன்கள், ஒரு லேப்டாப், 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். அப்ஜித்சிங்கை தேனி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, இந்த குற்றத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறுகிய நாளில் சைபர் கிரைம் மூலம் 84.5 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சைபர் குற்றவாளியை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசாருக்கு தேனி மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்சியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்..வகுப்பறையில் நடந்த கொடூர சம்பவம்! - student attack on teacher