திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியைச் சேர்ந்த ரஞ்சினி என்பவருடன் திருமணமாகி, 3 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும், இவர் அப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தேங்காய் ஏற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வீரியம்மிக்க காட்டு கருணைகிழங்கு வகை கிழங்கை கண்டுள்ளார். பின்னர், அந்த கிழங்கு ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து, தனது வீட்டிற்கு கொண்டு சென்ற மணிகண்டன் கிழங்கை வேகவைக்காமல் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, மணிகண்டனின் முகம் மற்றும் வயிறு வீங்கியுள்ளது. இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் விக்ரமிடம் கேட்டபோது, "மணிகண்டன் சாப்பிட்ட கிழங்கு வகை, வீரியமிக்க காட்டு கருணை கிழங்கு ஆகும். இதனை வேகவைக்காமல் அப்படியே சாப்பிட்டால், அது நேராக இரைப்பையை தாக்கும்.
மணிகண்டனும் இந்த காட்டு கருணை கிழங்கை வேகவைக்காமல் அப்படியே சாப்பிட்டதால், அது அவருடைய இரைப்பையை நேரடியாக தாக்கியுள்ளது. அதனால் தான் அவரது முகம் மற்றும் வயிறு வீங்கி உயிரிழந்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாமல், இதுபோன்ற காய்கறி மக்கள் உண்ண வேண்டாம்" என்று சித்த மருத்துவர் விக்ரம் அறிவுறுத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த நபர் மீது தீ வைப்பு.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் கொலைக்கான பின்னணி என்ன?