சென்னை: எண்ணூர் காசி கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி வீரராகவன். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பாக காசிமேடு காவல்நிலையம் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கைதாகி சிறையில் இருந்த வீரராகவன், சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து, நீதிமன்றம் வீரராகவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் பின்னர், வீரராகவன் தனது வழக்கறிஞர் உடன் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததற்கான காரணத்தை கடிதமாக அளித்துள்ளார். ஆனால், அந்த கடிதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் வீரராகவனை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறையினர் வீரராகவனை கைது செய்துள்ளனர். அப்போது, வீரராகவன் தன்னிடம் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும், 4 தோட்டாக்களையும் வழக்கறிஞர் மூலமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் போலீசாரிடம் தகராறு செய்த இருவர் கைது.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!
இதனை அடுத்து துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பெற்றுக்கொண்ட காசிமேடு காவல்துறையினர் துப்பாக்கி யாரிடம் வாங்கப்பட்டது என வீரராகவனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பு என்ற புதூர் அப்பு தனது நண்பர் என்றும், தாங்கள் இருவரும் ஒரிசா மாநிலம் சென்று அந்த துப்பாக்கியை வாங்கி வந்ததாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது பாதுகாப்பிற்காக அந்த துப்பாக்கியை வாங்கி வைத்ததாக வீரராகவன் தெரிவித்துள்ளார் என்றும், இதன் அடிப்படையில் ரவுடி வீரராகவன் மற்றும் அவரது நண்பர் புதூர் அப்பு மீது ஆயுதத் தடை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்