தஞ்சாவூர்: ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அவரது உடல் ரயில் தண்டவாளத்தின் அருகிலும், தலை அப்பகுதியில் உள்ள கோயில் வாசல் முன்பும் கண்டறியப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் சதீஷ்குமார் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (பிப்.13) தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சதீஷ்குமார், தனது நண்பர்களுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்குச் செல்லும் போது, விபத்தில் காயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் தன் நண்பரை சந்தித்து விட்டு, தனது மற்ற நண்பர்களுடன் சதீஷ்குமார் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட மணிகண்டனின் நண்பர்கள் சிலர் சதிஷ்குமார் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதை அறிந்து அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் சதீஷ்குமாரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சிறிது தூரம் சென்றதும் அங்கு ஆயுதங்களுடன் தயாராக நின்று கொண்டிருந்தவர்கள் சதீஷ்குமாரை வெட்டுவதற்கு ஓடி வந்ததாகவும், அதனைக் கண்டு சதீஷ்குமார் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆயுதங்களுடன் வந்தவர்கள் சதீஷ்குமாரை விடாமல் கொலை வெறியுடன் துரத்தியுள்ளனர்.
அதன்பின்னர் அரசு மருத்துவமனை நுழைவாயில் எதிரே உள்ள ஒரு கடையில் வாசல் முன்பு சதீஷ்குமாரைச் சுற்றி வளைத்த மர்ம கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன் பின்னர், அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
பின்னர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இக்கொலை சம்பவம் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தில் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சதீஷ்குமார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் பட்ட பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் இரண்டு கொலைகள்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!