திருநெல்வேலி: நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதான நான்கு பேரும் நேரடியாக தீபக் ராஜாவை கொலை செய்யவில்லை என தெரிந்துள்ளது. மேலும், பொது இடங்களில் தனியாக செல்லாமல் தலைமறைவாகவே இருந்து வந்த தீபக் ராஜா சம்பவம் நடந்த நாளில் கொலை கும்பலிடம் சிக்கியது எப்படி? காதலியின் தோழியே சதி வேளையில் ஈடுபட்டாரா போன்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா (30). இவர் மீது தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை, வல்லநாட்டில் நடைபெற்ற இரட்டை கொலை, தாழையூத்தில் நடைபெற்ற கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் கொலை என பல முக்கிய கொலை வழக்குகள் உள்ளன. மேலும், தனது சமூகத்தை சார்ந்த விஷயங்களில் தீவிர முனைப்பு காட்டி வந்துள்ளார்.
கூலிப்படை: இந்நிலையில்தான் தீபக் ராஜா தனது காதலியுடன் வெளியில் வந்த இடத்தில் வைத்து மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தீபக் ராஜா கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக தீபக் ராஜா கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், அந்த கொலையில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் கூலிப்படை மூலம் தீபக் ராஜாவை கொலை செய்ததாகவும், அதற்காக கூலிப்படையினர் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதும் அம்பலமாகியுள்ளது.
ஆபத்தை கணித்த தீபக்: பசுபதி பாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜா பசுபதி பாண்டியன் மறைவுக்குப் பிறகு அவருக்கு இணையாக தமது சமுதாய மக்களுக்காக களத்தில் இறங்கி குரல் கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு க்ரைம் எண்களும் இவர் மீது அதிகரித்துள்ளன. பல முக்கிய கொலை வழக்குகளில் ஈடுபட்டிருப்பதால் எந்த நேரமும் தனக்கு ஆபத்து வரும் என்பதை கணித்த தீபக் ராஜா பெரும்பாலும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கூலிப்படையைச் சேர்ந்தவரான நவீன் என்பவரிடம் பல லட்சம் கொடுக்கப்பட்டு தீபக் ராஜாவை தீர்த்து கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன் தனது அடியாட்கள் சுமார் 15 பேரை கையில் வைத்துக்கொண்டு கடந்த பல நாட்களாக தீபக் ராஜாவை நோட்டமிட்டு வந்துள்ளார்.
அடுத்த மாசம் திருமணம்: இந்த சூழலில் தான் தீபக் ராஜா சட்டக்கல்லூரியில் படிக்கும் தனது காதலியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் முடிவான நிலையில் காதலி தனது தோழிகளுக்கு விருந்தளிக்கும்படி தீபக் ராஜாவை நெல்லைக்கு அழைத்துள்ளார். காதலிக்காக தனியாக காரில் வந்த தீபக் ராஜா தனது காதலி மற்றும் அவரது தோழிகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.
காதலியின் தோழி செய்த சதி: இதற்கிடையில் காதலியின் தோழிகளில் ஒருவரை ஏமாற்றி கூலிப்படையினர் விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நவீன் தனது அடியாட்களுடன் அரிவாள் உள்பட ஆயுதங்களுடன் ஹோட்டல் முன்பு தயார் நிலையில் இருந்துள்ளார். அவர் எதிர்பார்த்தபடி தீபக் ராஜா தனது காதலை மற்றும் காதலியின் தோழிகளோடு ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அனைவரும் உணவருந்தும் வர அக்கும்பல் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்துள்ளனர். சாப்பிட்டு முடித்த உடன் காதலி ஐஸ்கீரிம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதை வாங்கி கொடுத்த தீபக் ராஜா, நீண்ட நேரம் நான் வெளியே நிற்க முடியாது எனவே காருக்கு செல்கிறேன் நீங்கள் வாங்க என கூறிவிட்டு தனியாக காருக்கு சென்றுள்ளார். அப்போது வெளியே தயாராக நின்ற கும்பல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கன கச்சிதமாக நீபக் ராஜா கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
ஆறு பேர் எங்கே: இதனை தொடர்ந்து தீபக் ராஜா கொலை வழக்கில் நேற்று முன்தினம் ஐந்து பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர். அதில், நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்படி நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு ஐயப்பன், நெல்லை மேல நத்தத்தை சேர்ந்த முத்து சரவணன் மற்றும் ஒருவர் என நான்கு பேர் மீது கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வரும் நிலையில் தற்போது கைதான நான்கு பேரும் நேரடியாக தீபக் ராஜாவை கொலை செய்யவில்லை என்பதும் இவர்கள் கொலை நடந்த போது அருகில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
எனவே கொலையில் நேரடியாக தொடர்புள்ள நவீன் உட்பட 6 பேரை கைது செய்தால் மட்டுமே தீபக் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொலை நடந்த நான்கு நாட்களாகியும் தீபக் ராஜாவின் உடல் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க 28 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு!