விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (60). இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், தற்போது இராஜபாளையம் பொதுப்பணித் துறைக்கு பாத்தியப்பட்ட ஆதியூர் கண்மாயை மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளார்.
இந்த கண்மாயில் பச்சைகாலணி பகுதியைச் சேர்ந்த கார்த்திஸ்வரன் என்பவரும், இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் கண்மாய் கரையில் குடிசை அமைத்து, காவலாளிகளாக பணியாற்றியுள்ளனர். இதில் பச்சைக் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திஸ்வரன் மீன்களை திருடிச் செல்வதும், வெளியாளர்களை வைத்து வலைவீசி மீன்களைப் பிடித்துச் செல்ல அனுமதித்ததும் தர்மராஜுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தர்மராஜ் அவரைக் கண்டித்து கடந்த மூன்று நாட்களாக காவலாளி வேலைக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக முகவூர் பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவரை காவலாளியாக பணியில் அமைத்துள்ளார். இந்த நிலையில், வழக்கம் போல் தர்மராஜ் இன்று கண்மாய் கரையில் அமைந்துள்ள குடிசைக்கு வந்து மீன்களைப் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்துள்ளார். அப்போது காவலாளி சமுத்திரத்திடம், கண்மாய்க்குள் தார்ப்பாய் கிடக்கிறது, அதை எடுத்து வாருங்கள் என கூறிவிட்டு, அங்கு டீ குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு கஞ்சா போதையில் வந்த கார்த்திஸ்வரன், தான் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தர்மராஜின் தலை மற்றும் கைப்பகுதிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, தார்ப்பாயை எடுக்கச் சென்ற காவலாளி சமுத்திரம் வந்து பார்த்த போது, தர்மராஜ் ரத்த வளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்ட சமுத்திரம், அவ்வழியாகச் சென்ற நபரிடம் உதவி கேட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் வடக்கு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த கொலையில் கார்த்திஸ்வரன் மட்டும் தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டுத்தனமாக மீன்பிடித்து விற்பனை செய்த நபரை கண்டித்ததால், இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.