திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கெடாதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் குழந்தைகள் கௌதமி, வெற்றிமாறன் ஆகியோர் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், முனியன் தனது வீட்டில் இருந்து மாலை வெளியே சென்று வந்த நேரத்தில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு தீப் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அதே கிராமத்தைச் சார்ந்த மார்க்பந்த் என்பவர், வீட்டை திறக்க முற்பட்ட பொழுது, வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.
சிலிண்டர் வெடித்ததன் காரணமாக, கூரை வீடு முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களும் தீக்கிரயானது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டைத் திறக்க முற்பட்ட மார்க்பந்த் சிறு தீக் காயங்களுடன் உயிர் தப்பினார். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத் துறையினர், தீ ஏற்பட்ட காரணங்கள் குறித்தும் தீயினால் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவல் படி, சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.