சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி விஜயா (78). கூலித்தொழில் செய்து வந்த இவர், கடந்த ஜூலை 17ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பாததை அடுத்து, அவரது மகள் லோகநாயகி என்பவர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
அதனை அடுத்து, கடந்த 19ஆம் தேதி தனது தாயார் விஜயாவை காணவில்லை என எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகார் அளித்தார். அதில், "கடந்த ஜூலை 17ஆம் தேதி வீட்டில் நான் வேலைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் விஜயாவை காணவில்லை. அவர் ஹோட்டல் வேலைக்குச் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
அவர் வீட்டில் இருந்து சென்ற போது, வெள்ளை நிற பூ போட்ட புடவை, கழுத்தில் பால்நிற மணி மற்றும் காதில் ஒரு சவரன் கம்மல் போட்டு இருந்தார். மேலும், அவரது சுருக்குப் பையில் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை வைத்திருந்தார் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன விஜயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, கடந்த ஜூலை 23ஆம் தேதி விஜயாவின் வீட்டின் அருகே வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், அவர் வீட்டை காலி செய்து விட்டதாகக் கூறப்பட்டது.
அதன் பின்னர், சந்தேகம் அடைந்த போலீசார் பார்த்திபனின் செல்போன் டவர் சிக்னலை வைத்து தேடி வந்தனர். அதில், அவர்கள் விருதுநகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு பார்த்திபன்- சங்கீதா தம்பதியை கைது செய்தனர்.
இது குறித்து சென்னை எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, தி.நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் விருதுநகருக்குச் சென்று அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, மூதாட்டி விஜயாவை பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா கொலை செய்து, உடலை மூட்டை கட்டி வீசியதாகவும், அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதனை அடுத்து, அவர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கொலை செய்யப்பட்ட மூதாட்டி விஜயாவின் மகள் லோகநாயகியிடம், பார்த்திபன் - சங்கீதா தம்பதி 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றது தெரிவயந்துள்ளது.
பின்னர், லோகநாயகி கடனை திருப்பிக் கொடுக்கும்படி பலமுறை கேட்ட போது, விரைவில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, மூதாட்டி விஜயா தனது சுருக்குப் பையில் பணம் வைத்திருந்ததை சங்கீதா பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜயா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது, சங்கீதா அவரிடம் சுருக்குப் பயில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி உள்ளார்.
அப்போது விஜயா சத்தம் போட்டதால், அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த விஜயாவை பார்த்திபனும், சங்கீதாவும் சேர்ந்து அவரது வீட்டிற்கு தூக்கிச் சென்று, இருவரும் சேர்ந்து மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் மூட்டை கட்டியுள்ளனர்.
பின்னர், இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலை கழுவுநீர் கால்வாயில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், மூதாட்டியின் உடலை கால்வாயில் தேடிவந்த போலீசார், உடலை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது.. முக்கிய புள்ளிகள் சிக்குவது எப்போது?