சென்னை: கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப செட்டியார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இதில், 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை, விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் 2006ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன் பின், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து 2005ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நீதித்துறை மீதான நம்பிக்கையைக் கேலிக்கூத்தாக்கும் வகையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதால், இது சம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இந்த வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தொழில்நுட்ப மாணவர்களுக்கு இனி தாய்மொழி உட்பட இரு மொழியில் கேள்வித்தாள் - அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் அறிவிப்பு!