மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காளையார்கோவில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 20 வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கோயில் திருவிழாவை முன்னிட்டு செம்பனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டு அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, மனுவைப் பரிசளித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அரசு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்தது. இந்த சூழ்நிலையில் அனுமதி கோரிய மனுவை மாவட்ட ஆட்சியர் நிராகரித்துள்ளார். எனவே செம்பனூர் கிராம அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்த அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் திருவிழாவை முன்னிட்டு செம்பனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவதுமாக முடிந்து விட்டது. ஆகவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நடிகை பற்றி அவதூறு பேச்சு - இயக்குநர் சேரன் கண்டனம்!