மதுரை: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "1951ஆம் ஆண்டு எஸ்டேட் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பொதுமக்கள் வசிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் பிரித்து வழங்கியது.
அதன் அடிப்படையில், திருப்பைஞ்சீலி அருள்மிகு ஸ்ரீ ஞீலிவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும், பிரித்து வழங்கப்பட்டன. இந்த நிலையில், வாழ்மால்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், சட்டவிரோதமாகக் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
மேலும், 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் நிலத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்தும் சுப்பிரமணியன், முறையாக வரியையும் செலுத்துவது இல்லை. இதுமட்டும் அல்லாது, கோயிலின் பட்டயதாரர் எனக் கூறிக்கொண்டு கோயிலின் நடவடிக்கைகளிலும் தலையிட்டு வருகிறார்.
இந்த சூழலில், கிராமத்தின் 80 சதவீத மக்கள் அவர் பட்டயதாரராக இருப்பதை விரும்பாததாக, கையெழுத்திட்டு கோயில் நிர்வாகத்திடம் வழங்கியும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, திருப்பைஞ்சீலி அருள்மிகு ஸ்ரீ ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை சுப்ரமணியனிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனௌ நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் ஈடுபட்ட நீதிபதிகள், "இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி விவகாரம்; மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!