சென்னை: கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ? பட்டா மாறுதல் செய்யவோ? தமிழக அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மேய்ச்சல் நிலங்களை மாற்ற அரசுக்கோ? மூன்றாம் நபருக்கோ? அதிகாரம் இல்லை. நிலத்தை மாற்றுவதாக இருந்தால் கால்நடை மேய்ச்சலுக்கான மாற்று நிலத்தைக் கண்டறிந்த பின்னரே மாற்ற முடியும். நில ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" என்று நீதிபதிகள் எடுத்துரைத்தனர்.
அதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, வருவாய்த்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுவினைத் தாக்கல் செய்தார். அதில், "தகுந்த மாற்று இடம் வழங்கப்பட்ட பின்னர் தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக நிலங்களை எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் மாற்று இடம் கண்டறியப்பட்ட பின் புறம்போக்கு நிலங்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்பில் கூறியது போல மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மக்கள் நலத்திட்டங்களுக்கு உபயோகப்படுத்தலாம். மாற்று நிலம் ஒதுக்காமல் பட்டா மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!