சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைப்பதால், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமணங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீட்சிதர்களுக்கு எதிராக போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசைத் தொடர்ந்து, மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
குழந்தைத் திருமணம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும், அறநிலையத் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அறநிலையத் துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே மாவட்ட சமூக நல அதிகாரி உள்ள நிலையில், இன்னொரு குழு எதற்கு எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், குழந்தை திருமணங்கள் குறித்து உடனுக்குடன் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாது, இன்னொரு குழுவால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் தீட்சிதர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: “எனது உரிமைதான் மேலானது.. மற்றபடி அமைதியானவர்”.. காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா தரப்பு வாதம்!